புதுடில்லி : கொரோனா வைரசை எதிர்கொள்ள அடுத்த 2 மாதங்களில் 2.7 கோடி என்95 மாஸ்க்குகள்,1.5 கோடி மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், 16 பரிசோதனை கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என மத்திய அரசு கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல், கொரோனாவை எதிர்கொள்ளுவதற்காக நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் தலைமையில், சர்வதேச அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிர்வாகிகள் அடங்கிய குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனா வைரசை எதிர்கொள்ள அடுத்த 2 மாதங்களில் 2.7 கோடி என்95 மாஸ்க்குகள்,1.5 கோடி மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், 16 பரிசோதனை கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும். அதனை வாங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்டது. ஜூன் மாதத்திற்குள் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 16 ஆயிரம் உள்ளது. எஞ்சிய 34 ஆயிரம் வென்டிலேட்டர்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் துவக்கியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மார்ச் மாதம், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சைக்கான மாஸ்க்குகள், அதனை தயாரிப்பதற்கான உபகரணங்கள் ஆகியவையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.